.webp)
-557921.jpg)
Colombo (News 1st) நாட்டில் அடுத்த மாதம் வெப்பமான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எல்-நினோ படிப்படியாக வலுவடைந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டார்.
எல்-நினோ நிலைமை சாதாரணமாக 6 மாதங்கள் அல்லது 1 வருடத்திற்கு நீடிக்கும் நிலைமையே பொதுவானதென சுட்டிக்காட்டிய அவர், இம்முறை ஜூன் மாதம் ஆரம்பமான எல்-நினோ அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவடையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போன்று தொடர்ச்சியாக வெப்பம் அல்லது கடும் மழை பெய்யும் நிலைமை இலங்கையில் காணப்படாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
மாறாக எல்-நினோ நிலைமையால் இலங்கையின் பருவப்பெயர்ச்சியில் மாற்றங்கள் எற்படும் நிலைமையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் கடும் மழை பெய்யக்கூடுமென எதிர்வு்கூறப்பட்டுள்ளதால் மேலதிக பயிர்ச்செய்கைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் நீர்முகாமைத்துவ குழுவை கூட்டி பெரும்போகம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எட்டவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.பீ விக்கிரமசிங்க தெரிவித்தார்.
விவசாயத்திற்கு தேவையான நீரை விநியோகிப்பதில் சிக்கல்கள் இல்லையெனவும் தேவையான நீர் தற்போது நாட்டில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பெரும்போகம் நவம்பர் மாதமளவில் வழமையாக ஆரம்பிக்கப்படும் என்ற போதிலும், எல்-நினோ அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளதால், பெரும்போக செய்கையை முன்கூட்டியே ஆரம்பிப்பதன் ஊடாக மழைவீழ்ச்சியை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
எல்-நினோ நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் அமைச்சரவை உபகுழு, அதற்கான அதிகாரிகள் குழு ஸ்தாபிக்கப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டீ.பீ விக்கிரமசிங்க தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் தலைமையில் குறித்த குழுக்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றுக்கூடி, தேவையான ஆலோசனைகளை நடத்திவருவதாகவும் அவர் கூறினார்.
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரின் தரவுகள் மற்றும் எதிர்வுகூறல்களை அடிப்படையாக கொண்டு அவசியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடும் மழையுடனான வானிலை ஏற்படுவதற்கு முன்னதாக சிறுபோக செய்கையை நிறைவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் டீ.பீ விக்கிரமசிங்க தெரிவித்தார்.
