உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றின் தீர்ப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றின் தீர்ப்பு

by Staff Writer 23-07-2026 | 7:33 PM

Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட கோரி பரீட்சைக்கு தோற்றும் 09 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரியவினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகளின் பிரகாரம் கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய பாடசாலை நாட்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூபதி கஹதுடுவ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

'டித்வா' சூறாவளி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புதன்கிழமைகளில் அரச விடுமுறை அறிவிக்க  எடுக்கப்பட்ட தீர்மானங்களால் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகள் முறையாக இடம்பெறவில்லை எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில் தற்போது திட்டமிட்டுள்ளவாறு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டால் மாணவர்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுமென சட்டத்தரணி குறிப்பிட்டார்.

எதிர்வரும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக சுமார் 378,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதன்போது தெரிவித்தார்.

எனினும் அவர்களில் 9 பேர் மாத்திமே இந்த பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மூலம் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவர்கள் ஆண்டு தோறும் பாடசாலைக்கு 80 வீத வருகையைப் பூர்த்தி செய்வது அவசியம் என்ற போதிலும் மனுதாரர்களில் 1 மாணவரின் பாடசாலை வருகை 7.2 வீதம் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதால் பல்கலைக்கழக சேர்க்கை போன்ற நடவடிக்கைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தினார்.

அடிப்படை விடயங்களை பரிசீலிக்கும்போது இந்த பரீட்சை நடத்தப்படும் நடைமுறையில் தலையிடும் அளவுக்கு போதுமான காரணங்கள் முன்வைக்கப்படாததால் இந்த வழக்கில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை எனவும் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.

இம்முறை உயர்தரப் பரீட்சையின் கல்வியாண்டு நிறைவடையும் நாளுக்கும் பரீட்சை நடைபெறும் நாளுக்கும் இடையே 3 நாட்கள் போன்ற குறுகிய கால இடைவெளி மாத்திரமே உள்ளதால் பரீட்சையில் ஏதேனும் அநீதி இழைக்கப்படும் பட்சத்தில் அது ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் பாதிக்கும் என்பதால், பொறுப்புள்ள அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்துவது உகந்தது என அரச தரப்பு சட்டத்தரணிக்குத் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.​

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் விடைத்தாள் மதிப்பீடு மற்றும் புள்ளிகளை வழங்குவதில் மாணவர்களுக்கு ஏதேனும் சலுகைகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்துவது பொருத்தமானது எனவும் அவர் கூறினார்.