.webp)
-615824-556061.jpg)
Colombo (News 1st) சுற்றுச் சூழலுக்கு அதிகளவான நச்சுப் புகையை வெளியேற்றியவாறு பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடனான விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை இரகசியமாகக் கண்காணித்து, அவற்றினால் வௌியேற்றப்படும் புகையை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் சிறப்பம்சமாகும் என திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பிரதான நகரங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த பிரிவின் அதிகாரிகள் வீதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு, அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை நிழற்படம் எடுத்து அந்த சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு உத்தரவுகளைப் பெறும் வாகன உரிமையாளர்கள் தமது வாகனத்தை உரிய முறையில் புதுப்பித்து, குறிப்பிட்ட தினத்தில் வேரஹெரவில் அமைந்துள்ள வாகன புகை வெளியேற்ற நிலையத்தில் நிறுத்த வேண்டும் என மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் ஒரு வகையில் இந்த அறிவிப்பிற்கு பதிலளிக்காத வாகனங்களை, மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பின் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
