.webp)

Colombo (News 1st) கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த வழக்கு விசாரணை செய்யப்படவுள்ளதுடன், மனோஜ் தல்கொடபிடிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய நீதிபதிகள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் பிரகாரம் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் செலுத்த வேண்டிய 184 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை இதுவரை செலுத்தப்படவில்லை.
கிரேக்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த போது, அதனை அறிந்திருந்தும் கிரேக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பிணைமுறிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
கடந்த டிசம்பர் 10ஆம் திகதி, முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நிபந்தனையுடனும் ஏனைய 03 பிரதிவாதிகளை நிபந்தனையின்றியும் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கப்ரால் விடுவிக்கப்பட்ட நிபந்தனையின்படி அந்த கொடுக்கல் - வாங்கலினால் ஏற்பட்ட 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை 03 மாதங்களுக்குள் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிட வேண்டுமென குறிப்பிடப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த கால அவகாசம் கடந்த மார்ச் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்தே விசாரணைக்காக நிரந்தர விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழாத்தை நியமிக்குமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்தது.
