.webp)
-552094.jpg)
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள கிழக்கு அலை காற்றின் தாக்கம் வலுவடைந்துள்ளமையால் நாளை(29) முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவுவதாக திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை நிலைமை வலுவடைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிகக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, நாட்டில் ஏற்பட்டுள்ள கிழக்கு அலை காற்றின் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவு தயார் நிலையிலுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொடுவேகொட தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் காலி, மாத்தறை களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த மாவட்டங்களிலுள்ள சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கு அதிக மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
