.webp)

Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 02ஆவது வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று(07) பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சுதந்திர இலங்கையின் 80ஆவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும்.
2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் 1.30-க்கு பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 4,434 பில்லியன் ரூபாவாகும்.
அடுத்த ஆண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம், நிதி பிரதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் கடந்த 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அதிகப்படியாக நிதி அமைச்சுக்கு 634 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
301 பில்லியன் ரூபா நிதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா, பொது நிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபா 2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் 14ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை 3 சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பிற்பகல் 06 மணிக்கு இடம்பெறவுள்ளது.
