தலைமறைவான 03 சந்தேகநபர்கள் கைது

படகு மூலம் நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டுவர முயற்சித்த 03 சந்தேகநபர்கள் திருகோணமலையில் கைது

by Staff Writer 05-11-2025 | 2:53 PM

Colombo (News 1st) மீன்பிடிப் படகு மூலம் நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு முயற்சித்த 03 சந்தேகநபர்கள் திருகோணமலையில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் திருகோணமலை முகாம் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நுவன் திலகரத்னவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் ​போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரன் மெனிக்கா 13 எனும் நீண்டநாள் மீன்பிடி படகில் கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி மிரிஸ்ஸ துறைமுகத்திலிருந்து 05 பேர் கொண்ட குழு கடலுக்கு சென்றிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

குறித்த குழுவினர் சர்வதேச கடல் எல்லையில் இரு சந்தர்ப்பங்களில் ஈரான் கப்பலிலிருந்து 180 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை தமது படகிற்கு ஏற்றி நாட்டிற்கு கொண்டுவந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.

கடற்படையினரின் படகு அவர்களை விரட்டிச்சென்ற போது, தமது படகிலிருந்த போதைப்பொருட்களை குறித்த குழுவினர் கடலில் வீசியுள்ளனர்.

சந்தேகநபர்களில் சிலர் கடந்த 02ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவரும் தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் திருகோணமலை பகுதியில் அவர்களை கைது செய்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு(04) மாத்தறை, கொட்டவில பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு  பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.