.webp)
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித்தடை உத்தரவுகளை நீக்குவதற்கு நேற்று(16) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிட்டகோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு இணைந்து செயற்படும்போது ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் சட்ட மாஅதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரபன தலைமையில் குழுவை நியமிக்க இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செயற்குழுவின் இந்த தீர்மானம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இருந்த தடைகள் நீங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து பொதுக் கூட்டணியாக செயற்படுவதற்கு முன் வந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் செயற்குழு கூட்டத்தின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.