.webp)
Colombo (News 1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளின் சாட்சியாளராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை பெயரிடுவதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்திற்கு இன்று(16) அறிவித்தார்.
குறித்த வழக்கு கலாநிதி நாமல் பலல்லே, மகேஷ் வீரமன், சுஜீவ நிஷ்ஷங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச்சென்று, காணாமலாக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் 09 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா மேலதிக சாட்சி விசாரணைகளை முன்னெடுத்தார்.
2015ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கின் பிரதான விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை முறைப்பாட்டு தரப்பு சாட்சியாளராக பெயரிடுமாறு சட்ட மாஅதிபரிடம் வேண்கோள் விடுத்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2022 நவம்பர் 29ஆம் திகதி தாம் மன்றில் ஆஜராகி குறித்த கோரிக்கையை விடுத்ததாகவும் அதனை பரிசீலிப்பதாக அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அறிவித்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.
வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ சார்ஜன்ட் ரன்பண்டா, மன்றில் பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் பாரபட்சமான சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளிப்பதற்கு முன்பாக தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நிக்கவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னரே அவர் மன்றில் பொய்யான சாட்சியம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஷானி அபேசேகரவை முறைப்பாட்டாளர் தரப்பினர் 109ஆவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளதாக இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா தெரிவித்தார்.
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் கூறினார்.
வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முற்பகல் 10.30 க்கு முன்னெடுக்கப்படவுள்ளன.