பகிடி வதைக்கு எதிராக நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் பகிடி வதைக்கு எதிராக நடவடிக்கை

by Staff Writer 03-05-2025 | 5:03 PM

Colombo (News 1st) பகிடிவதையை எதிர்நோக்கும் மாணவர் ஒருவர் அது குறித்து அறிவிப்பதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையிலும் அவர் நியமிக்கப்படுவார் என பிரதியமைச்சர் ​டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 2ஆம் வருட  மாணவனின் மரணம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணையை நடத்துவதற்காக விசாணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி பிரதியமைச்சர் ​டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

பொலிஸாரினால் இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் இதற்கு மேலதிகமாக உளநல சுகாதாரப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படுவதால் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதியமைச்சர் ​டொக்டர் மதுர செனவிரத்ன வலியுறுத்தினார்.