.webp)
Colombo (News 1st) வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மாத்திரமன்றி மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலையை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிக்கிறார்.
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கொழும்பில் நேற்று(02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனை கூறினார்.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் பங்காளிகளாக உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் மோதல்களுக்குப் பின்னர் எழுந்த ஒரு தேவையாக இருந்தாலும் கண்ணிவெடி அகற்றல் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமென்பதுடன் மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம், அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியை மீட்டெடுக்கும் செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் கூறினார்.
வடக்கு, கிழக்கில் சுமார் 23 சதுர கிலோமீற்றர் நிலம் இன்னும் கண்ணிவெடிகள் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த பிரதமர் கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளை பொதுமக்கள் விரைவில் பயன்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டிய தேவை குறித்தும் வலியுறுத்தினார்.
2028 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறினார்.