கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

by Staff Writer 03-05-2025 | 10:11 PM

Colombo (News 1st) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(03) விசேட தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் இந்தியாவின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக கிடைத்த தகலுக்கமைய இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறினார்.

இன்று முற்பகல் 11.59 அளவில் இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து யூ.எல் 122 விமானத்தில் பயணித்த பயணிகளுடன் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவின் சென்னையிலிருந்து குறித்த தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தகவல்கள் கிடைத்த பின்னர் பொலிஸார், விமானப் படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் இணைந்து விமானம் மற்றும் அதில் வந்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர்.

எனினும், இதன்போது சந்தேகத்திற்கிடமான எவரும் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைபோன்று நடைபெறுவதாக நாம் வினவிய போது விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த குறித்த விமானத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் காரணமாக குறித்த விமானம் சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதில் தாமதமேற்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.