இந்திய-பாக். இராஜதந்திர உறவில் மீண்டும் விரிசல்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இராஜதந்திர உறவில் மீண்டும் விரிசல்

by Staff Writer 24-04-2025 | 7:13 PM

Colombo (News 1st) ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இராஜதந்திர உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலையடுத்து இரண்டு நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

உடன் அமுலுக்குவரும் வகையில் பாகிஸ்தான் பிரஜைகளுக்கான விசா விநியோகத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தான் பிரஜைகளும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டைவிட்டு வௌியேற வேண்டுமென இந்திய வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக விசா பெற்றுக்கொண்டவர்கள் இந்தியாவைவிட்டு வௌியேற 72 மணித்தியாலங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாகிஸ்தானிலிருந்து இயன்றளவு விரைவாக வௌியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டனை அளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்தோர் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்களெனவும் பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

பயங்கரவாதிகளின் மீதமுள்ள மண்ணைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் கார்கில் முதல் கன்னியாகுமரி வரை முழு நாடும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளதெனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் அரசின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளம் இந்தியாவிற்குள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சினால் எக்ஸ் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தமும் இந்தியாவினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஹல்காம் தாக்குதல் என்பது இந்தியாவின் பழி சுமத்தும் செயற்பாடாக இருக்கலாமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் மீது இந்தியாவினால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அந்நாட்டுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பில் தம்மீது குற்றஞ்சாட்டிய இந்தியாவின் திட்டம் "“false flag operation” அதாவது பழிசுமத்தும் செயற்பாடென" பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

அரசியல் அல்லது இராணுவ நடவடிக்கையின் பின்னர் வேண்டுமென்றே எதிராளி தரப்பினர் மீது பழிசுமத்தும் நடவடிக்கை ஆங்கிலத்தில் “false flag operation.” எனப்படுகின்றது.

பதற்றத்தை ஏற்படுத்தி போரில் ஈடுபடுவதற்கான ஓர் கருவியாக தமது தரப்பில் உண்மையான அல்லது போலியான தாக்குதலை நடத்தி எதிரியே அதனை செய்ததாக கூறுவதன் மூலம் உலகின் பல நாடுகள் பெரும்பாலும் இதனைச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த வார்த்தை முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே, இந்திய உரிமம் பெற்ற மற்றும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து விமானங்களும் தமது வான்பரப்பில் பயணிப்பதை தடுத்து உத்தரவிடுவதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகள் மீது நேற்றுமுன்தினம்(22) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கு பின்னர் இடம்பெற்ற மிகவும் கொடூரமான தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் கருதப்படுகின்றது.

இந்நிலையில் காஷ்மீர் மக்களை எதிரிகளாக கருத வேண்டாமென நாட்டு மக்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு நாட்டு எல்லையிலும் பெருமளவான படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.