பாப்பரசர் பிரான்சிஸிற்கு 26ஆம் திகதி இறுதி ஆராதனை

நித்திய இளைப்பாறிய பாப்பரசர் பிரான்சிஸிற்கு 26ஆம் திகதி இறுதி ஆராதனை

by Staff Writer 22-04-2025 | 7:37 PM

Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக வத்திக்கான் இன்று(22) அறிவித்தது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு இறுதி ஆராதனை ஆரம்பமாகவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

நல்லடக்க ஆராதனை தொடர்பாக திட்டமிடுவதற்காக உலக நாடுகளிலுள்ள கர்தினால்கள் இன்று காலை ஒன்றுகூடினர்.

பாப்பரசர் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய உரோமிலுள்ள புனித மரியாள் மெஜோரி பேராலயத்தில் பரிசுத்த பாப்பரசரின் புகழுடலை நல்லடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

வத்திக்கானுக்கு வௌியில் தமது உடலை நல்லடக்கம் செய்யுமாறு பாப்பரசர் ஏற்கனவே கோரியிருந்த நிலையில் கர்தினால்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

1669ஆம் ஆண்டுக்கு பின்னர் புனித மரியாள் மெஜோரி பேராலயத்தில் பாப்பரசர் ஒருவரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸின் புகழுடல் சாந்த மார்த்தா சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை சென்.பீட்டர்ஸ் பேராலய திறந்த வெளியில் நடத்தப்படவுள்ளது.

தமது இறுதி ஆராதனையை மிக எளிமையாக நடத்துமாறு பாப்பரசர் தமது இறுதி விருப்பத்தில் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று தமது புகழுடலை சைப்ரஸ், ஈயம் மற்றும் ஓக் பேழைகளில் வைப்பதற்குப் பதிலாக எளிமையான மரப்பேழையில் வைக்குமாறும் பரிசுத்த பாப்பரசர் தமது இறுதி விருப்பில் குறிப்பிட்டிருந்தார். புகழுடலை உயர்பீடத்தில் வைக்காது அடித்தளத்தில் வைக்குமாறும் பாப்பரசர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நாளை சென் பீட்டர்ஸ் பெசிலிக்கா ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகைதரும் பொதுமக்களுக்கு ரோம் அதிகாரிகளினால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகளவான மக்களின் வருகையை கருத்திற்கொண்டு இத்தாலியின் ரயில்வே நிறுவனம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய கத்தோலிக்கர்களின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் நேற்று(21) காலை நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

வத்திக்கான் நேரப்படி நேற்றுக்காலை 7.35 அளவில் காஸா சென்டா மார்தாவிலுள்ள இல்லத்தில் அவர் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பினால் நித்திய இளைப்பாறுதல் அடைந்ததாக வத்திக்கான் அறிவித்திருந்தது.

இதனிடையே, வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறும் போதோ, பதவியிலிருந்து ஓய்வுபெறும் போதோ நிர்வாகத்தை ஒப்படைக்கும் வகையில் இந்த நியமனம் அவரால் கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதற்கமைய புதிய பாப்பரசர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை வத்திக்கானின் பதில் தலைவராக கர்தினால் கெவின் பெரல் ஆண்டகை செயற்படுவார்.

பரிசுத்த பாப்பரசரின் நித்திய இளைப்பாறுதலையடுத்து உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒன்று கூடிவருகின்றனர்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை தொடர்பான அறிவிப்பு வௌியிடப்படுவதற்கு முன்னரே சில நாடுகளின் தலைவர்கள் அவர்களின் பங்கேற்பினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாரியாருடன் நல்லடக்க ஆராதனையில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

ஆர்ஜன்டினா ஜனாதிபதி Javier Millie, யுக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zaleski, பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரேஸில் ஜனாதிபதி, போலாந்து ஜனாதிபதி ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஆகியோரும் நல்லடக்க ஆராதனையில் பங்கேற்கவுள்ளனர்.

தாய்லாந்திலிருந்து தூதுக் குழுவொன்று நல்லடக்க ஆராதனையில் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin நல்லடக்க ஆராதனையில் பங்கேற்கமாட்டார் என அவரின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆராதனையில் பங்கேற்கவுள்ளவர்கள் தொடர்பிலான அறிவிப்பும் இதுவரையில் வௌியிடப்படவில்லை.

இதேவேளை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் பிறப்பிடமான ஆர்ஜென்டினாவில் 7 நாட்கள் துக்கத்தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேஸிலில் 7 நாட்களும், ஸ்பெயினில் 3 நாட்களும் துக்கத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில், பாரிஸில் உள்ள நோட்ரே டேம் பேராலயத்தில் இன்று(22) அதிகாலை 88 முறை மணி ஓசை எழுப்பப்பட்டதுடன் அங்குள்ள பிரபல ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்படவுள்ளன.

​நல்லடக்க ஆராதனை நடைபெறும் தினத்தன்று போலந்தில் தேசிய துக்கத்தினம் அனுஷ்டிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 3ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் Anthony Albanese மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இன்று முன்னெடுக்கவிருந்த தேர்தல் பிராசாரங்கள் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நித்திய இளைப்பாறலை முன்னிட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பாப்பரசரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்