.webp)
Colombo (News1st)உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 06 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான பிரதான ஆராதனை நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ளது.
2019 ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாள் இலங்கை வரலாற்றில் கறுப்புப் பக்கமாக பதிவானது.
உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகளில் கலந்துகொண்டிருந்த கத்தோலிக்கர்களை இலக்குவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டமையே அதற்கான காரணமாகும்.
நாட்டில் 03 கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பிலுள்ள 07 ஹோட்டல்களில் அன்றைய தினம் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 269 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இந்த தாக்குதல்களின் மாறாத வடுக்களை எமக்கு அன்றாடம் நினைவூட்டி அங்கவீனமடைந்த பலர் இன்னல்களுக்கு மத்தியில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகள் எனப்படும் விசுவாசத்தின் நாயகர்கள் என அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும் விசேட ஆராதனையின் போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகள் எனப்படும் விசுவாசத்தின் நாயகர்களாக ஏற்றுக்கொள்ளும் பட்டியல் முதன்முறையாக வெளியிடப்படவுள்ளது.
இதனிடையே தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 8.45 முதல் 8.47 வரை இரண்டு நிமிட மென அஞ்சலி செலுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.