.webp)
Colombo (News1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களில் மாத்திரம் 1,200 சோதனைகளை முன்னெடுத்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தது.
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான சோதனைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அதிகாரசபை குறிப்பிட்டது.
விற்பனைப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாதவர்கள், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மாற்றுபவர்கள், காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள், பற்றுச்சீட்டுக்களை வழங்காதவர்கள் தொடர்பிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நிபந்தனைகளுடன் பொருட்களை விற்பனை செய்தல், நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் விலை குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது..
சம்பா, கீரி சம்பா அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் முட்டை, கோழி இறைச்சியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.