.webp)
Colombo (News 1st) பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாகி கண்ட இடத்தில் கைது செய்யம்படி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் இன்று(19) முற்பகல் ஆஜரானார்.
அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைப்பதாக மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபரான தேஷபந்து தென்னகோன் சட்டத்தரணிகளின் ஊடாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து ஆஜரான நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேஷபந்து தென்னகோன் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஷானக ரணசிங்க நீண்ட விளக்கங்களை சமர்ப்பித்து பிணைக் கோரிக்கையை முன்வைத்தார்.
சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடயங்களை முன்வைத்து பிணை வழங்க தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன் விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரான தேஷபந்து தென்னகோனை நாளை வரை அவரை விளக்கமறியலில் வைத்து பிணைக்கான உத்தரவை நாளை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவருக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.