.webp)
Colombo (News1st) இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் 28 வீத மாணவர்கள் நாளாந்தம் சீனி கலந்த பானங்களை அருந்துவதுடன் 28.5 வீத மாணவர்கள் உப்பு கலந்த சிற்றுண்டிகளை பெற்றுக் கொள்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தவிர 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்டுக்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சுகாதார ஆய்வறிக்கையானது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வௌியிடப்பட்டுள்ளது.