.webp)
Colombo (News 1st) கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியும் அவரது அமைச்சரவையும் நேற்று(14) பதவியேற்ற நிலையில் இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி அந்நாட்டின் நீதி அமைச்சராகவும் சட்ட மாஅதிபராகவும் பதவியேற்றுள்ளார்.
கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று(14) பதவியேற்றதையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.
இதன்போது கெரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
அந்நாட்டின் அரச பூர்வீக குடி உறவுகள் அமைச்சராகவும் வடக்கு விவகாரங்கள் அமைச்சுப் பதவியுடன் ஏற்கனவே தான் ஏற்றுள்ள பதவிப் பொறுப்புக்களையும் வகிக்கவுள்ளார்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கனேடிய பொருளாதார அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு பொறுப்பான அமைச்சராக உள்ள அவர் ஸ்காபுரோ றூச் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார்.
கனேடிய வரலாற்றில் அமைச்சரவை அமைச்சராகப் பதவியேற்ற முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெருமைக்குரியவராக கெரி ஆனந்தசங்கரி திகழ்கின்றார்.
ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகபடியான வாக்குகளைப் பெற்று கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அவர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.