பஸ் கொள்வனவு தொடர்பான வௌிக்கொணர்வு

இந்தியாவிலிருந்து பஸ் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான வௌிக்கொணர்வு

by Staff Writer 06-03-2025 | 7:34 AM

Colombo (News 1st) விஞ்ஞான ரீதியான மற்றும் தேவைகளை பகுப்பாய்வு இன்றி இந்தியாவிலிருந்து பஸ்களை கொள்வனவு செய்ததன் காரணமாக 3010 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தவேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இந்த பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டில் அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கமைய 54 இருக்கைகள் மற்றும் தலா 35 இருக்கைகள் கொண்ட 500 பஸ்களை கொள்வனவு செய்வற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் 2020ஆம் ஆண்டில் அரசாங்கம் மேற்கொண்ட புதிய கொள்கைக்கமைய இதற்கு பதிலாக 600 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றுள் 45 இருக்கைகள் மற்றும் 35 இருக்கைகளை கொண்ட பஸ்களே கொள்வனவு செய்யப்படவிருந்தன.

அதற்கமைய, திட்டமிடப்பட்டதை விட மேலதிகமாக 100 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.

எனினும் இந்த அனைத்து கொள்முதல் நடவடிக்கைகள் தவிர அமைச்சரவையின் ஒப்புதலுடன் 2023ஆம் ஆண்டில் 500 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

32 இருக்கைகள் கொண்ட பஸ்ஸொன்று 26,662.50 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, 500 பஸ்களும் 133,11,250 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா பெறுமதியில் பஸ்ஸொன்று சுமார் 11.2 மில்லியன் ரூபாவாகும் என கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

இது 2018ஆம் ஆண்டு கொள்முதல் செயன்முறையின் அடிப்படையில் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்ட பஸ்ஸொன்றுக்கான விலையை விட 6.2 மில்லியன் ரூபா அதிகமாகும்.