.webp)
Colombo (News 1st) இறைவனையும் மக்களையும் இணைக்கும் அன்பின் பாலமான இறைமகன் இயேசுவின் பாடுகள், மரணத்தை நினைவுகூரும் மனமாற்றத்தின் காலமான தவக்காலம் இன்று(05) ஆரம்பமாகின்றது.
உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் திருவழிபாட்டின் முக்கிய காலங்களுள் ஒன்றான தவக்காலத்தில் இன்று அடியெடுத்து வைத்துள்ளனர்.
இன்றிலிருந்து உயிர்த்த ஞாயிறு வரையான 40 நாட்கள் தவக்காலமாக கணிக்கப்படுகின்றது.
திருநீற்றுப் புதனான இன்று ஒவ்வொரு கிறிஸ்தவருடைய நெற்றியின் மீதும் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் இடப்படுகின்றது.
மண்ணிலிருந்து உருவான நாம் மண்ணுக்கே திரும்பிச்செல்வோம் என்ற உணர்வை நெற்றியில் இடப்படும் சாம்பல் எமக்கு உணர்த்துகின்றது.
இறைமகன் இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களுக்காக ஏற்ற பாடுகளையும் மரணத்தையும் நினைவு கூர்ந்து உயிர்ப்பு பெருவிழாவுடன் மிக மகிழ்ச்சியோடு இறைமீட்பில் பங்குபெற அழைப்பு பெறும் காலமாக தவக்காலம் அமைந்துள்ளது.
தவக்காலம் என்பது மன்னிப்பின் காலம், மனமாற்றத்தின் காலம், அருளின் காலம், இரக்கத்தின் காலம், அன்பை அதிகம் உணரும் காலம், அந்த அன்பை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் காலம்.
நாம் யார், எமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு என்ன?, எமக்கும் அயலவருக்கும் இடையில் உள்ள உறவு என்ன? என்பவற்றை ஆய்ந்தறிந்து தந்தையாம் இறைவனை எமக்குள் வாழவைக்கும் காலம்.
மனம் வருந்தி, பழைய பாவ வாழ்க்கையை உதறிவிட்டு கிறிஸ்துவோடு இணைந்து அவருடன் உயிர்த்தெழ எம்மை தயார்ப்படுத்தும் காலம்.
ஜெபம், தவம், தானம், ஒறுத்தல், நற்செயல்கள் வழியாக கடவுளோடு ஒப்புரவாக எம்மை அழைப்பதே தவக்காலத்தின் சிறப்பாகும்.