.webp)
Colombo (News 1st) யுக்ரேனுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ அறிக்கையின் மூலம் இதனை உறுதிப்படுத்தினார்.
யுக்ரேன் ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் வரையில் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்துவதற்கு ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அத்துடன், போலந்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்து யுக்ரேனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளும் இந்த தீர்மானத்திற்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சின் இராணுவ நிதியளிப்பு திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் யுக்ரேனுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், அமெரிக்க அரசின் "யுக்ரேன் பாதுகாப்பு உதவி முன்னெடுப்பு" (USAI) திட்டமானது யுக்ரேனுக்கு நேரடியான இராணுவ உதவிகளை வழங்குகின்றது.
ரஷ்யாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் மிகத் தொலைவிலுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்க்கி வௌியிட்ட அறிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் வௌியிட்டார்.
அதனைத் தொடர்ந்து சில மணித்தியாலங்களில் இராணுவ உதவி நிறுத்தப்படுவதாக புதிய அறிவிப்பு வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 வீத வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் அனைத்து வரிகளும் அமலுக்கு வரவிருந்த நிலையில் அமெரிக்கா கனடா மற்றும் மெக்சிகோவிற்கு ஒருமாத காலஅவகாசம் வழங்கப்பட்டது.
சீன இறக்குமதிகள் மீது 10 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.