.webp)
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்பட்ட தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரீத்தி பத்மன்சூரசேன, யசந்த கோத்தாகொட, ஏ.எச்.எம்.டீ.நவாஸ், சிரான் குணரத்ன, அச்சல வெங்கபுலி ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் இன்று(24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.
பிரதிவாதியான தேஷபந்து தென்னகோன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் இன்று முன்னிலையாகினார்.
தமது சேவைபெறுநர் பொலிஸ் மாஅதிபர் பதவியில் செயற்படுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தால் தற்போதும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதன்படி மனுக்களை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயிக்குமாறும் அவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 9 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவையால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சட்டத்திற்கு முரணானது என மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.