கொலைகள் தொடர்பாக வௌிவந்த தகவல்கள்

மித்தெனிய மற்றும் புதுக்கடை கொலைகள் தொடர்பாக வௌியான தகவல்கள்

by Rajalingam Thrisanno 21-02-2025 | 6:57 PM

Colombo (News 1st) மித்தெனியவில் மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகேவும் அவரது இரு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இன்று(21) தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூவரினதும் சடலங்கள், மித்தெனிய குடகல்ஆர பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறவுள்ளன.

அருண கடந்த 13 ஆம் திகதி மெதமுலன பகுதியில் அமைந்துள்ள தனது மனைவியின்  தகப்பனாரின் வீட்டிலிருந்து தோரகொலயாயவில் தற்காலிகமாக தாம் தங்கியிருந்த இடத்திற்கு தனது 3 பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அவர் கல்பொத்தயாயவில் தனது மூத்த ஆண் பிள்ளையை ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு இரவு உணவை வாங்கிவருவதற்காக தனது மற்றைய  2 பிள்ளைகளுடனும் சென்ற போதே கடேவத்த சந்தியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது கடுவலையிலுள்ள தங்குமிடமொன்றில் சந்தேகநபரான பெண்ணினால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக துப்பாக்கிதாரியால் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இதன்போது துப்பாக்கியை சோதனைக்குட்படுத்தியமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கொலைக்கு முன்னர் சந்தேகநபரான பெண் குறித்த இடத்தில் தங்கியிருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேகநபர் இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் வேனொன்றில் கற்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண் நீர்கொழும்பிலிருந்து முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கெசெல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மனுனுதினு பத்மசிறி மற்றும் கொமாண்டர் சலிந்த ஆகியோரினால் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய ஒப்பந்தமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணும் சந்தேகநபரும் திவுலப்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இரண்டு விடுதிகளில் தங்கியிருந்ததும்  தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்காக ஒன்றரை கோடி ரூபா ஒப்பந்தம் இடப்பட்டிருந்த நிலையில் 200,000 ரூபா மாத்திரம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் எஞ்சிய தொகையை இந்தியாவில் பெற்றுக்கொள்வதற்கு தாம் இணங்கியிருந்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தப்பிச் சென்ற பெண்ணை கைது செய்வதற்காக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரியை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் காவலில் விசாரணைக்குட்படுத்தவும் நீதவான் இன்று(21) அனுமதியளித்தார்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இருவரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.