Colombo (News 1st) நிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அதற்கான கடன் தவணைக்கு சீனாவின் எக்ஸிம் வங்கியின் அனுமதியை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீனாவிற்கான விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலின் பயனாக குறித்த நிர்மாணப்பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக வீதியின் முதல் கட்டம் கடவத்தை தொடக்கம் மீரிகம வரையில் அமைந்துள்ளது.
இது 37 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.
இதுவரை 20 வீத நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர், பொறியியலாளர் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்குள் இதனை மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய அதிவேக வீதியில் பொத்துஹர முதல் கலகெதர வரையிலான பகுதி மூன்றாம் கட்டத்திற்கு உரித்தானதாகும்.
இதன் நீளம் 32.5 கிலோமீட்டர்களாகும்.
அதன் நிர்மாணப்பணிகள் உள்நாட்டு பொறியாளர்கள் மற்றும் உள்நாட்டு நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக பொத்துஹர முதல் இரம்புக்கனை வரையிலான 13.5 கிலோமீட்டர் நீளமான பகுதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.