வலுசக்தி அமைச்சின் எதிர்பார்ப்பு

100 சூரிய மின்னுற்பத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்த நடவடிக்கை - வலுசக்தி அமைச்சு

by Staff Writer 05-02-2025 | 9:56 AM

Colombo (News 1st) பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுள்ள 100 சூரிய மின்னுற்பத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தேசிய மின் கட்டமைப்பில் 500 மெகாவாட் திறனை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இவற்றில் 10 மெகாவாட் வரையிலான சூரிய மின்சக்தி திட்டங்களும் உள்ளடங்குகின்றன.

குறித்த திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஆவணங்களில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல காரணங்களினால் அந்தத் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது போயுள்ளதாக அமைச்சர் கூறினார்.

4,000 மெகாவாட் திறன் கொண்ட 49 சூரிய மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தி திட்டங்களிலிருந்து ஓர் அலகு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலை தொடர்பாக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.