Colombo (News 1st) யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தமது பதவியை இராஜினாமா செய்தார்.
இது தொடர்பான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் நேற்று(27) கலைப்பீடத்தில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் அறிக்கை வௌியிட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில் மீறல்களிலும் வன்முறைகளிலும் கருத்து வௌிப்பாட்டு சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும் உடைமை சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலை நிர்வாகம் கடந்த காலத்தில் உறுதியாக நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டத்தில் 5 கோரிக்கைகள் முன்வைத்து நேற்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும் இன்று முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.