பெயர் மாற்றத்தை வரவேற்கும் இந்திய பிரதமர்

யாழ்.கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றத்தை வரவேற்கும் இந்திய பிரதமர்

by Staff Writer 19-01-2025 | 8:22 PM

Colombo (News 1st) யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதை  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு நேற்று(18) 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டது.

இந்திய உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க சின்னமாக திகழும் கலாசார நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு தெய்வப் புலவரான திருவள்ளுவரின்  பெயர் சூட்டப்பட்டமை தொடர்பில் பெருமகிழ்வடைதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்திய - இலங்கை உறவுக்கு சான்றாக அமைந்துள்ள கலாசார மையமானது இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு அபிவிருத்தி திட்டமாகும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யாழ்.கலாசார மையம், திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டமை தமிழின்   பெருமையை பரப்புவதற்கான பிரதமர் மோடியின் மற்றுமொரு மைல்கல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இது இந்தியா - இலங்கை இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.