Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி, நுவரெலியா, காலி, அனுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய 5 மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பலத்த மழையுடனான வானிலையால் முந்தெனி ஆறு, மல்வத்து ஓயா மற்றும் மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
முந்தெனி ஆற்றின் நீரேந்துப் பகுதிகளான அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று மற்றும் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிறியளவிலான வௌ்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்கும் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளயால் திம்புலாகல, ஈச்சிலம்பற்று, கிண்ணியா, கந்தளாய், கோறளைப்பற்று வடக்கு, மூதூர், சேருவில, ஹிங்குராங்கொடை, லங்காபுர, மெதிரிகிரிய, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வௌ்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இருநாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு 5 வான்கவுகள் அரை அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.ரியாஸ் தெரிவித்தார்.
இதனிடையே, பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீட்டருக்கும் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய இடங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இடி, மின்னல் தாக்கங்களின் போது ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் அதிகளவிலான மழைவீழ்ச்சி திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
திருகோணமலையில் 178 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, குருணாகல், மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவு, மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த, உக்குவெல, இரத்தோட்டை, வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.