காஸாவில் நாளை காலை முதல் போர் நிறுத்தம் ஆரம்பம்

காஸா எல்லையில் நாளை(19) காலை 8.30 முதல் போர் நிறுத்தம் ஆரம்பம்

by Staff Writer 18-01-2025 | 7:15 PM

Colombo (News 1st) காஸா எல்லையில் நாளை(19) காலை 8.30 முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை நேரப்படி நாளை(19) நண்பகல் 12 மணிக்கு பின்னர் பணயக்கைதிகள் மற்றும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான பரிமாற்றம் இடம்பெறுமென கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்தன.

இது 3 கட்டங்களாக செயற்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

முதல்கட்டமாக 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த காலப்பகுதியில் ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன், இவர்களில் பெண்கள், குழந்தைகள், இராணுவ வீரர்களும் அடங்குகின்றனர்.

இதனிடையே இஸ்ரேலில் இருந்து 737 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பட்டியலும் தயாராகியுள்ளது.

இந்தப் பட்டியலில் Popular Front for the Liberation of Palestine அமைப்பின் முக்கியத் தலைவர் புஷ்ரா அல் தவில்(Bushra al-Tawil) இடம்பெற்றுள்ளார்.

மேலும் பலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.

இருதரப்பிலிருந்தும் நாளை(19) மாலை 4 மணி அளவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள்  மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் வரை பணயக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதலால் காஸாவில் 46,000-இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.