பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 17-01-2025 | 6:42 PM

Colombo (News 1st) அறுபது ஏக்கருக்கும் அதிகமான காணியை கையகப்படுத்தியமை தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ராவல்பிண்டி ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று(17) 14 வருட சிறைத்தண்டனை விதித்தது.

அதே குற்றச்சாட்டுக்காக அவரது மனைவிக்கும் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் அவர் கைது செய்யப்பட்டதுடன் ஊழல், முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் அன்று முதல் இன்று வரை சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி Bushra Bib-யும் கைது செய்யப்பட்டு அதன்பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரதமராக செயற்பட்ட காலப்பகுதியில் ஊழலுடன் தொடர்புடைய காணி கொடுக்கல் - வாங்கலை செய்துள்ளதாக வழக்கை நிறைவு செய்த ராவல்பிண்டி ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் இந்த சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் 60 ஏக்கர் நிலமும் தலைநகரிலுள்ள மலையடிவாரத்தில் அவரது சொகுசு பங்களாவுக்கு அருகில் மற்றொரு நிலத்தை கையகப்படுத்தியதாகவும் நிலத்தை வழங்கிய தரப்பினருக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகவும் இம்ரான் கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனினும் வழக்குடன் தொடர்புடைய காணியை அல்-கதீர் அறக்கட்டளை என்ற பெயரில் இம்ரான் கான் முன்னெடுத்த சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டது.

வழக்கின் நிறைவில் இம்ரான் கானுக்கு 14 வருடங்களும் அவரது மனைவிக்கு 7 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணை கோரியிருந்த அவரது மனைவியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இம்ரான் கானின் தரப்பு தெரிவித்துள்ளது.