Colombo (News 1st) 15 மாதங்களாக நீடித்த காசா - இஸ்ரேல் இடையிலான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் நேற்று(15) இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாகவே போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
தாம் பதவி ஏற்று இருவாரங்களுக்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதலளித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
முழுமையான போர்நிறுத்தம் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளை மீளப்பெறுதல் மற்றும் ஹமாஸ் பிடியிலுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் ஆகியன இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ளன.
போர்நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸின் பிடியிலுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போர்நிறுத்த அறிவிப்பு காசாவிலுள்ள பலஸ்தீன மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தின் இறுதி விபரங்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் வௌியிடப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பெஞ்சமின் நெதன்யாஹு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தத்தை உலகின் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
போர்நிறுத்தத்தால் மகிழ்ச்சியடைவதாகவும் இதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Ghebreyesus தெரிவித்துள்ளார்.