கம்மெத்த இல்லங்கள் தோறும் 3ஆம் நாள் இன்று

கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 8ஆம் அத்தியாயத்தின் 3ஆம் நாள் இன்று

by Staff Writer 11-01-2025 | 8:18 PM

Colombo (News 1st) நாட்டின் நாலாத் திசைகளுக்கும் சென்று மக்களின் துயரறியும் கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 8ஆம் அத்தியாயத்தின் 3ஆம் நாள் இன்றாகும்.

மக்களை சந்தித்து தகவல்களை திரட்டி கிராமங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காணும் நோக்கில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு  கம்மெத்த குழுவினர் இன்று(11) சென்றிருந்தனர்.

பேராதனை பல்கலைக்கழகம் இம்முறையும் இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் சந்திக்க சென்றுள்ள கம்மெத்த குழாத்தினர் இன்று(11) காலை பாண்டவட்டை கிராம மக்களை சந்தித்தனர்.

சங்கானை பிரதேச செயலகத்தில் பாண்டவட்டை கிராமம் உள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளவாலை உயரப்புலம் கிராமத்திற்கும் கம்மெத்த குழு சென்றது.

கூலித்தொழில் இந்த மக்களின் வாழ்வாதாரமாகும்.

உயரப்புலத்திலுள்ள 48 வீடுகளுக்கு தலா 750,000 ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலுள்ள கம்மெத்த குழாத்தினர் ஸ்க்ரப் தோட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய இன்று(11) சென்றிருந்தனர்.

குடிப்பதற்கு சுத்தமான நீரின்றி வசிப்பதற்கு நிரந்தர வீடின்றி  தற்காலிக கூடாரங்களில் இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

4 வருடங்களுக்கு முன்னர் வீட்டிற்கான இடம் ஒதுக்கப்பட்டு 2 முறை அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் இன்று வரை பாரிய சவால்களை எதிர்கொள்வதாக இங்குள்ள மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

காலி கொக்கல்ல ரிட்டிபென்ன மீனவ கிராமத்திற்கும் கம்மெத்த இல்லங்கள் தோறும் குழுவினர் சென்றிருந்தனர்.

மீன்பிடி தொழிலை தமது வாழ்வாதாரத்தை நகர்த்தும் இவர்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வாறு மீன்பிடிப்பது என்பதை காண்பித்து உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளளப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளே அதற்கான காரணமாகும்.

இதனிடையே அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் கம்மெத்த குழுவினர் சென்றனர்.

கட்டுவாகம, இஹலமில்லவெவ உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற கம்மெத்த இல்லங்கள் தோறும் குழுவினர் அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.