இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை

by Staff Writer 25-12-2024 | 2:43 PM

Colombo (News 1st) அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த விண்ணுலக தேவன் இயேசு பாலகனின் பிறப்பை உலகளாவிய கிறிஸ்தவ மக்கள் இன்று(25) கொண்டாடுகின்றனர்.

உலகின் பிரதம நத்தார் ஆராதனை வத்திக்கானிலுள்ள சென் பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்றது.

இந்த ஆராதனைக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.

அதன்பின்னர் சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நத்தார் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்.

நாட்டின் பிரதான ஆராதனை இந்த வருடம் ஜா-எல வியாகுல அன்னை தேவாலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதே நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை  உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான அரசியல் கலாசாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் அர்ப்பணிக்க  இந்தப் புனித நத்தார் தினத்தில் அனைவரும் உறுதிபூண வேண்டுமெனவும் ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள பிரதமர், ஒற்றுமையுடன் செயற்படுதல், பகிர்ந்து வாழுதல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் ஊடாக எமது உறவுகளும் வலுவானதாக முன்னேற்றமடையும் என கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் காணப்படும் யுத்த சூழல் காரணமாக சிறுவர்களும் மரணிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு மத்தியில் நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த பண்டிகை காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடுவதில் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அனைவரது பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு சரியான தெரிவுகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் அன்புடனும் செயற்பட்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம் இதுவென நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.