Colombo (News 1st) யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாம் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் அவதூறான விடயங்கள் பரப்பப்பட்டமை, கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட விடயங்களால் தமக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி வைத்தியர் சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த யாழ்.மேலதிக மாவட்ட நீதிபதி அ.ஆனந்தராஜா, வழக்காளிக்கு எதிராக எவ்வித அவதூறான கருத்துகளை தெரிவிக்கக்கூடாதென அறிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தார்.
இந்த இடைக்கால தடையுத்தரவை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் தற்போதைய இந்த கட்டளை தொடர்பான அறிவித்தலின் பிரதியை பிரதிவாதிக்கு அனுப்புமாறும் நீதவான் அறிவித்தார்.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி, கலாநிதி குமார வடிவேல் குருபரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.