Colombo (News 1st) யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நேற்று(16) பிணை வழங்கப்பட்டது.
தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிபந்தனை பிணையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அவருடன் சென்றிருந்த சட்டத்தரணி N.கௌஷல்யா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி N.கௌஷல்யா ஆகியோர் கடந்த 9ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று(16) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிபந்தனை பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும் காலங்களில் அனுமதி பெற்றே வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது எனவும் வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.