Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(15) இந்தியாவிற்கு பயணமானார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் அனில் ஜயந்த உள்ளிட்டவர்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடனும் ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோல், இந்திய பிரதி குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரையும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்பதுடன், இன்று ஆரம்பமாகும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.