Colombo (News 1st) தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கெதிரான குற்றப்பிரேரணை தென்கொரிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டாவது குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றில் இன்றும் இடம்பெற்றது.
குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக 204 வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி நிக்கப்படுவதாக அந்த நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டு 60 நாட்களில் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரேரரணை முடிவுகள் தொடர்பில் கருத்து வௌியிட்ட யூன் சுக் யோல், தனது பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும், நாட்டுக்கான தமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென தெரிவித்துள்ளார்.
யூன் சுக் யோல், தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.
முதலாவது குற்றப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டதுடன் இரண்டாவது குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்ததது.
அத்துடன், நாட்டில் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
தென்கொரிய பாராளுமன்றத்திற்கு முன்னால் இன்றும்(14) பெருமளவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதி பதவிநீக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மக்களே நாட்டில் அதிகார பலத்தை கொண்டவர்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய எதிர்க்கட்சி தலைவர் Lee Jae-myung தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் பெரும் சவால்கள் காணப்படுவதாகவும், அதனை வெற்றிக்காெள்ளும் பயணத்தை நோக்கி செல்லுமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் அரசாங்கத்தின் நிலையான செயற்பாடுகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக தென்கொரியாவின் பதில் ஜனாதிபதியாக பொறுப்பெற்கவுள்ள Han Duck-soo தெரிவித்துள்ளார்.