பலத்த மழையுடனான வானிலையால் 275,582 பேர் பாதிப்பு

பலத்த மழையுடனான வானிலையால் 275,582 பேர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ நிலையம்

by Staff Writer 27-11-2024 | 2:25 PM

Colombo (News 1st) பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் இதுவரை 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 275,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்திலேயே அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

104 தற்காலிக முகாம்களில் 10,137 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(27) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி யாழ்ப்பாணத்திலேயே பதிவாகியுள்ளது.

யாழில் 253 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அச்சுவேலி பிரதேசத்தில் 245.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் முல்லைத்தீவு - துணுக்காயில் 50.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவானது.

இதேவேளை,  பலத்த மழை காரணமாக 3 மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கங்கவட கோரள, உடுதும்பர, தொலுவ, யட்டிநுவர, உடபலத, பாதஹேவாஹெட்ட உடுநுவர தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகள்,

மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, யதாவத்த, ரத்தோட்ட, வில்கமுவ, அம்பங்க கோரள, லக்கல பல்லேகம, பல்லேபொல, நாவுல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்,

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவிற்கே இவ்வாறு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலையால் யாழ்.மாவட்டத்தில் 2855 குடும்பங்களைச் சேர்ந்த 9854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வௌ்ளத்தால் வீடொன்று முழுமையாகவும் 46 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஓமந்தை நொச்சிமோட்டை பாலம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் வௌ்ளத்தால் முற்றாக மூழ்கியுள்ளது.