Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான H.M.M.ஹரீஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹரீஸுக்கு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
2024 ஒக்டோபர் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் 2024 ஒக்டோபர் 16ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹரீஸ் கல்முனையில் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை மாவட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடத்தை கட்சியின் ஒழுக்கத்தை கடுமையாக மீறுவதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்கத்தை வட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்குவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹரீஸுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.