IMF 3ஆம் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு

IMF 3ஆம் கடன் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது - பீட்டர் ப்ரூவர்

by Staff Writer 23-11-2024 | 6:12 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்குற்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3ஆம் கடன் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவிக்கிறார்.

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று(23) முற்பகல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4 வருட காலப்பகுதியைக் கொண்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீடடர் ப்ரூவர் தெரிவித்தார்.

ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான உடன்படிக்கை அங்கீகாரம் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளுக்கு அமைய இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான இலக்குகள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், செப்டெம்பர் அளவில் வேலைத்திட்டத்தின் செயற்றிறன் வலுவாகக் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக பெரும்பாலான கட்டமைப்பு ரீதியான இலக்குகள் தாமதத்துடனேனும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கூறினர்.

புதிய அரசாங்கத்திற்கான மக்கள் ஆணை, ஊழல் இன்றி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கானது எனவும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கான மீளாய்வுக்காக கடந்த 17 ஆம் திகதி  இலங்கையை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.