மின்சக்தி அமைச்சின் செயலாளர் மன்னிப்பு கோரினார்

மின்சக்தி - எரிசக்தி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரினர்...

by Staff Writer 19-11-2024 | 10:21 PM

Colombo (News 1st) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் சி.ஏ.சுனெத் லோச்சன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையின்றி இன்று(19) மன்னிப்பு கோரியுள்ளனர்.

மின்சக்தி - எரிசக்தி அமைச்சுக்கு சொந்தமான இலங்கை ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் லிமிட்டட் நிறுவனம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கணக்காய்விற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு தெரிவித்து குறித்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலேயே அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் மூலம் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஏற்கனவே நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய நீதிமன்றத்தில் தனிப்பட்ட ரீதியில் ஆஜராகி குறித்த இருவரும் மன்னிப்பு கோரினர்.

குறித்த கடிதத்தை அனுப்பிவைத்ததில் நீதிமன்றத்திற்கு அவதூறை ஏற்படுத்தும் நோக்கம் பிரதிவாதிகளிடம் இருக்கவில்லை என மின்சக்தி - எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தலையீடுகளால் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்படுவதாகவும் அது நீதிமன்றத்தின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாக நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியது.

இதன்மூலம் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்படும் என்பதை கற்றறிந்த நிர்வாக அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.