Colombo (News 1st) ஜப்பான் பொதுத் தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை.
தாராளவாத ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 208 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.
அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் ஏனைய கட்சிகளும் 235 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளன.
அதற்கமைய உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜப்பானின் ஆளுங்கட்சிக்கு இம்முறை பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற முடியவில்லை.
465 ஆசனங்களை கொண்ட ஜப்பான் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்த 233 ஆசனங்கள் தேவை.
தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜப்பானின் தற்போதைய பிரதமருமான ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) இன்னும் சில மணித்தியாலங்களில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
எவ்வாறாயினும் இம்முறை தேர்தல் முடிவுகள் கட்சியை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அண்மையில் பதவியேற்ற பிரதமர் ஷிகெரு இஷிபாவின் (Shigeru Ishiba) எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான இஷிபா (Shigeru Ishiba) கடந்த மாதம் அவரது முன்னோடியான ஃபுமியோ கிஷிடாவுக்குப் (Fumio Kishida) பின்னர் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.
ஜப்பானில் இம்மாதம் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள், மின்சாரம் மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.