Colombo (News 1st) 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "ருஹுனு குமாரி" ரயில் சேவைக்கு இன்றுடன்(24) 69 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
1955 யில் சிலோன் ரயில்வேயின் பொது மேலாளராக கடமைபுரிந்த மறைந்த P.D.ரம்பபாலவின் கருத்திற்கு அமைவாக ருஹுணு குமாரி (உருகுண இளவரசி) ரயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ருஹுணு குமாரி (உருகுண இளவரசி) இலங்கை ரயில்வேயின் உடன் பிறந்த 3 சகோதரிகள் என வர்ணிக்கப்படும் 3 ரயில் சேவைகளின் முதன்மையானதாக போற்றப்படும் ரயில் சேவைாகும்.
யாழ்தேவி, உடரட்ட மெனிகே, ருஹுனு குமாரி ஆகிய 3 ரயில் சேவைகளே இலங்கை ரயில்வேயின் 3 சகோதரிகளாக வர்ணிக்கப்படுகின்றன என்பதுடன் இவை இலங்கையில் மிக நீண்ட காலமாக இயங்கும் ரயில் சேவைகளாகும்.
ருஹுணு குமாரி ரயில் கொழும்பு மருதானை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை ரயில் நிலையம் வரை M2ரக 572 இலக்கமுடைய British Columbia எஞ்சினை முதல் பயணத்திற்கு பயன்படுத்தியுள்ளதுடன் புதிதாக தயாரிக்கப்பட்ட 10 புகையிரத பெட்டிகளுடன் இயங்கி ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களில் ருஹுனு குமாரி ரயில் M2, M4, M6 ரக என்ஜின்கள் மற்றும் ரோமானிய, இந்திய, சீன பெட்டிகளுடன் ஓடியது.
பின்னர் இணைக்கப்பட்ட 2 பவர் செட்களின் மூலம் இயக்கப்பட்டது.
இதன் ஆரம்ப கட்டமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S11 ரக பவர் செட் மூலம் இயங்கியது.
தற்போது இந்தியாவில் S13 ரக பவர்செட்களுடன் இயங்குகிறது.
முதல் பயணத்தை மேற்கொண்ட M2 572 - பிரிட்டிஷ் கொலம்பியா எஞ்ஜின் இன்றும் பயன்பாட்டில் உள்ளமை சிறப்பம்சமாகும்.
M2 மற்றும் M4 ரயில் குடும்பத்தின் பல எஞ்ஜின்களை பெருமையுடன் சுமந்து சென்ற உருகுணு இளவரசி ரயில் சேவை வழமை போன்று இன்றும் இலங்கை ரயில்வே சேவைக்கு தனது அளப்பரிய சேவையை கம்பீரமாக முன்னெடுப்பதை காண முடிகின்றது.