பாராளுமன்றத் தேர்தல் திகதியை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

by Staff Writer 21-10-2024 | 7:53 PM

Colombo (News 1st) பொதுத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களின் விதிமுறைகளுக்கு முரணாகவே, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வாக்கெடுப்பை நடத்துவதற்கான தினம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் ஒருவர், "நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின்" ஏற்பாட்டாளர் எச்.எம்.ப்ரியந்த ஹேரத் ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்டத்தின் 10ஆவது பிரிவிற்கு அமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒக்டோபர் 4 முதல் 11 வரை திகதி குறிக்கப்பட்டதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டத்திற்கு அமைய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி தினத்திலிருந்து 5 வாரங்களுக்கு குறையாத காலம் மற்றும் 7 வாரங்களுக்கு மேற்படாத காலத்திற்குள் வாக்கெடுப்பிற்கான திகதி குறிக்கப்பட வேண்டும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்த ஒக்டோபர் 11 ஆம் திகதியிலிருந்து 5 வார காலம் நவம்பர் 15 ஆம் திகதியே நிறைவடைவதுடன், 7 வார காலம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நிறைவடைவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல், தேர்தலை நடத்துவதற்கான சரியான காலப்பகுதியாக நவம்பர் 15 முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியே காணப்படுவதாக சுட்டிக்காட்டி காட்டியுள்ள மனுதாரர் ஜனாதிபதியால் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக சட்டத்திற்கு புறம்பானது எனவும் அது சட்டவாட்சியை மீறும் செயல் எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்கும் திகதி குறித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியில் காணப்படும் பிழையை சீர்செய்வதற்கும் பொருத்தமான உத்தரைவ பிறப்பிக்குமாறு மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.