முறைப்பாடுகளை நிறைவு செய்ய பணிப்புரை

முறைப்பாடுகளை 2 வாரங்களுக்குள் நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை

by Staff Writer 06-10-2024 | 9:42 PM

Colombo (News 1st)  

நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் இதுவரை விசாரணை செய்யப்படாத மற்றும் நிறைவு செய்யப்படாத விசாரணைகளை 2 வாரங்களுக்குள் நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பாரியளவிலான பல்வேறு வகையான முறைப்பாடுகள் இதுவரை விசாரணை செய்யப்படாது அல்லது நிறைவு செய்யப்படாதுள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறியளவிலான சம்பவங்களாகப் பதிவாகும் பல்வேறு வகையான முறைப்பாடுகள் பாரிய குற்றங்களாக மாற்றமடைவது பொலிஸார் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சீர்குலைய காரணமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பல்வேறு வகையான முறைப்பாடுகள் தொடர்பில் அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் அதனை நிறைவு செய்ய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள உரிய அரச அதிகாரிகளால் ஆராயப்பட்டு அதற்கு எதிராக செயற்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் தமக்கு அறிக்கையிடப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மாஅதிபர் விடுத்துள்ள உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.