தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை தீர்மானம்

பொதுத் தேர்தலில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராமல் இருக்க தமிழ் மக்கள் பொதுச்சபை தீர்மானம்

by Staff Writer 06-10-2024 | 6:55 PM

Colombo (News 1st)  பொதுத் தேர்தலில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராமல் இருப்பதற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளுடன் தமிழ் மக்கள் பொதுச்சபை ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாகவோ பதவிக்கான போட்டியிடலாகவோ தமது அமைப்பு கருதவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாக கையாள முன்வந்ததுடன் அந்த முயற்சியில் வெற்றி பெற்றதாக தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது.

எனினும் பொதுத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி அரசியலாகவும் மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர் சார்ந்து கூறுபடுத்தி சிதறடிக்கும் செயற்பாடுகளை முதன்மையாக கொண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களது பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச்சென்று தேசத்திற்காய் ஒருங்கிணைக்க கால அவகாசமோ சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு தற்போதைய நிலையில் இல்லையென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் போட்டி அரசியல் என்பது தமது உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என தமிழ் மக்கள் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கத்துவ அமைப்புகள் அனைத்தும் தேர்தல் தொடர்பான பொருத்தமான தீர்மானங்களை தத்தமது அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறும் தமிழ் மக்கள் பொதுச்சபை அறிவித்துள்ளது.