ஹிஸ்புல்லா உளவுத்துறை மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்

by Staff Writer 05-10-2024 | 2:29 PM

Colombo (News 1st) லெபனான் தலைநகரிலுள்ள ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாஹ்வின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் வாரிசான ஹசிம் சபீர் என்பவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் இராணுவமோ ஹிஸ்புல்லா படையோ அவர் தொடர்பில் எந்த கருத்தையும் வௌியிடவில்லை.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் நிலை காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு 1.2 மில்லியனுக்கும் அதிகமான லெபனான் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹூதி கிளர்ச்சியாளர்களின் 15 தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடல் மார்க்க போக்குவரத்திற்கான சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் பயன்படுத்தியதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

யேமனின் தலைநகர் சனா உள்ளிட்ட  சில முக்கிய நகரங்களில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த வருடம் முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சுமார் 100 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி 2 கப்பல்களை மூழ்கடித்தமை குறிப்பிடத்தக்கது.