க.பொ.த. சா/த பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவி

க.பொ.த சா/த பரீட்சையில் 13,309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றனர் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

by Staff Writer 29-09-2024 | 2:15 PM

Colombo (News 1st)  இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் காலி சங்கமித்தா மகளிர் பாடசாலையின் ஹிருணி மல்ஷா முதலாமிடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு மியூஸியஸ் கல்லூரியின் குளுனி மெத்சலா மற்றும் குருணாகல் மலியதேவ மகளிர் பாடசாலையின் விமங்ஸா ஜயன ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 13,309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

www.results.exams.gov.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பரீட்சை பெறுபேறுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறு பத்திரம், க.பொ.த உயர்தர கற்றலுக்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.