அமைச்சுகளின் விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி

புதிய அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளை பட்டியலிட்டு வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 28-09-2024 | 9:12 PM

Colombo (News 1st) புதிய அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளை பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.

பாதுகாப்பு படைகளின் தலைமை அலுவலகம், இராணுவம், கடற்படை, விமானப்படை, அரச புலனாய்வு சேவை, இடர் முகாமைத்துவ நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் 62 நிறுவனங்கள் உள்ளன.

வலுசக்தி அமைச்சின் கீழ் 11 நிறுவனங்களும், விவசாயம், காணி, கால்நடை வள, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் அமைச்சின் கீழ் 35 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தொழில் அமைச்சின் கீழ் 38 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப முகவரகம், இலங்கை தகவல் பாதுகாப்பு அதிகாரசபை உட்பட 45 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மகளிர், சிறுவர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் 15 நிறுவனங்கள் வர்த்தமானியில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் 41 நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் 26 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் 53 நிறுவனங்களும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இந்த அமைச்சின் கீழ் வர்த்தமானியில் பட்டியலிடப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 17 ஆகும்.

இதில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் அடங்குகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை பொலிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன் சுற்றாடல், வனவிலங்குகள், வனவளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் 48 நிறுவனங்களும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் கீழ் 15 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.